மாமல்லபுரத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தற்கொலை


மாமல்லபுரத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தற்கொலை
x

மாமல்லபுரத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

கோபித்து கொண்டு சென்றார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 35). மீன் பிடி தொழில் செய்து வரும் இவர் ஒரு புறம் பகுதி நேரமாக சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷகிலா கணவரிடம் கோபித்து கொண்டு 2 பெண் குழந்தைகளுடன் மரக்காணத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மோகன் கடும் விரக்தியடைந்தார். கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகளாக போதிய வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து, வாழ்ந்து வந்த நிலையில் தற்போதுதான் வறுமையின் பிடியில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தார்.

தன்னுடைய மனைவி கோபித்து கொண்டு தன்னை தனிமையில் விட்டுவிட்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டாளே என்ற ஏக்கத்தில் மனமுடைந்தார்.

தற்கொலை

இதனால் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் மோகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாமல்லபுரம் மீனவர் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மீனவர் மோகன் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் மாமல்லபுரம் பகுதி மீனவர் யாரும் நேற்று மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.


Next Story