திண்டுக்கல்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வியாபாரி கொலை - வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள் குணசேவியர் (வயது 34). காய்கறி, மர விற்பனை செய்து வந்தார். இவருக்கு லிதியாமேரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
அவர், வேடப்பட்டி பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அருள் குணசேவியருக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள் குணசேவியரை சரமாரியாக குத்தினார். இதில் அவருடைய மார்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள் குணசேவியரை கத்தியால் குத்தியது வேடப்பட்டி இந்திராநகரை சேர்ந்த குட்டித்தம்பி என்ற பரமசிவம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.