கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை


கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை
x

கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை,

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (வயது 35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணி அளவில் கே.என்.ஜி.புதுார் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெய்கணேசை சரமாரியாக குத்திவிட்டு, தப்பியோடி விட்டார். இதில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக துடியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், கோவை பன்னிமடையை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன் (வயது 45) என்பவரின் மனைவிக்கும், இறந்த ஜெய்கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை சாமிநாதன் கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் கள்ளத்தொடர்பை அவர்கள் கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் ஜெய்கணேசை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் தலைமறைவாக உள்ள சாமிநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story