சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு


சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 7:58 AM IST (Updated: 12 Oct 2022 8:02 AM IST)
t-max-icont-min-icon

மகனுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காத மன வருத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர் நேற்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட்டு, வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவுவாயில் முன்பு வந்தார். அப்போது திடீரென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது. உடல் எரிந்த நிலையில் ஐகோர்ட்டு உள்ளே நடந்து சென்றார். தொடர்ந்து உடலில் பெட்ரோல் ஊற்றியபடி சென்றதால், தீ வேகமாக பரவியது.

இதனால் அங்கிருந்த போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. இலவச சட்ட ஆலோசனை மையம் அருகில் வந்தவுடன் தீயணைக்கும் எந்திரம் மூலம், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் போர்வையை அவர் மீது போர்த்தினார்கள். இந்த தகவல் அறிந்ததும் வக்கீல்களும், வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்களும் அங்கு கூட்டமாக திரண்டு விட்டனர்.

அந்த பதற்றமான சூழ்நிலையிலும், தீக்குளித்த வேல்முருகன், அங்கு கூடிநின்றவர்கள் மத்தியில் சத்தம் போட்டு பேசினார். அப்போது அவர், 'நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன். எனது இந்த முடிவின் மூலம், இனிமேல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சாதிச்சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்' இவ்வாறு அவர் சத்தம் போட்டு பேசினார்.

ஐகோர்ட்டு வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்ளிட்ட வக்கீல்கள் ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர். அவரை காப்பாற்ற முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே உடல் முழுவதும் தீக்காயங்களுடன், ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்ட வேல்முருகன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் சைதாப்பேட்டை பெண் மாஜிஸ்திரேட்டு அனிதா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று வேல்முருகனிடம் வாக்குமூலம் பெற்றார்.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். தீக்குளித்த வேல்முருகனுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.


Next Story