குடிபோதையில் சரக்கு வேனை திருடிச் சென்ற வாலிபர் - போலீசார் விரட்டியதால் கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள் மீது மோதினார்


குடிபோதையில் சரக்கு வேனை திருடிச் சென்ற வாலிபர் - போலீசார் விரட்டியதால் கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள் மீது மோதினார்
x

குடிபோதையில் சரக்கு வேனை திருடிய வாலிபர், போலீசார் விரட்டியதால் வேகமாக ஓட்டிச்சென்றபோது கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள் மீது மோதினார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

சென்னை

திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த சரக்கு வேனை நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் திருடிச் சென்றார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதனால் வேனை சாலையோரம் நிறுத்தும்படி கூறினர்.

ஆனால் போதையில் இருந்த வாலிபர், சரக்கு வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார், ரோந்து வாகனத்தில் லோடு வேனை விரட்டிச் சென்றனர்.

இதனால் வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மற்றும் முதியவர் ஒருவர் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தி இருந்த கார் மீது மோதி நின்றார். இதில் மோட்டார்சைக்கிள், ஆட்டோவில் வந்தவர்களும், முதியவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

பின்னர் அந்த வாலிபர் காரில் இருந்து இறங்கி தப்பிச்செல்ல முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு அச்சம்பட்டியைச் சேர்ந்த அலிதுரை(வயது 28)என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story