சென்னை விமான நிலையத்துக்கு பெயர், செல்போன் எண்ணுடன் வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்துக்கு பெயர், செல்போன் எண்ணுடன் வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
x

சென்னை விமான நிலையத்துக்கு பெயர், செல்போன் எண்ணுடன் மிரட்டல் கடிதம் வந்தது. அவரை விசாரணைக்கு வரும்படி அழைத்த போலீசாரிடம் தன்னை தேடி வரும்படி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளருக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் எழுதுவதாக தொடங்கி இருந்தது.

அந்த கடிதத்தில், "கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் எனக்கு சொந்தமான நாடு. இந்த நாட்டில் எனக்கு எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் நான் சென்னை விமான நிலையத்துக்கு வந்தால் என்னை விமான நிலைய உள்பகுதிக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே உங்களுடைய காவலர்கள் நிறுத்தி விடுகின்றனர். இந்த விமான நிலையம் என்னுடையது. அப்படி இருக்கையில் என்னை ஏன் உள்ளேவிட மறுக்கிறீர்கள்?.

நான் விரைவில் மீண்டும் சென்னை வருவேன். அப்போது என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும். தடுத்து நிறுத்தினால் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இனிமேல் நான் வரும்போது என்னை தடுத்து நிறுத்தக்கூடாது. இது எச்சரிக்கை.

இவ்வாறு கையால் தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் அவரது பெயர், ஊருடன் அவரது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.

விமான நிலைய மேலாளர், அந்த கடிதத்தை சென்னை விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பினார். அவர், அந்த காமெடியான மிரட்டல் கடிதத்தை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு இணையதளம் மூலம் புகாராக அனுப்பினார்.

சென்னை விமான நிலைய போலீசார், அந்த கடிதத்தில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டனர். போனை எடுத்த நபரிடம், "நீங்கள் அனுப்பிய கடிதம் தொடர்பாக உங்களை விசாரிக்க வேண்டும். நீங்கள் புறப்பட்டு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்" என போலீசார் கூறினர்.

அதற்கு மறுமுனையில் பேசியவர், "முன்னதாகவே தெரிவிக்காமல் இப்படி திடீரென போன் செய்தால் எப்படி?. நான் யாரையும் தேடிச்செல்ல மாட்டேன். என்னிடம் பேச வேண்டும் என்றால், நீங்கள் என்னைத்தேடி கள்ளக்குறிச்சி வாருங்கள்" என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பிறகு அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தில் உள்ள எழுத்துகள், செல்போனில் பேசியவரின் குரல் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, வயதான ஒருவர் தான் கண்ணன் என்று தெரிய வந்தது.

ஆனால் அவர் ஏன் இவ்வாறு மிரட்டல் கடிதம் எழுதி இருக்கிறார்? போனில் பேசினாலும் ஏடாகூடமாக பேசுகிறாரே? என்று குழப்பம் அடைந்தனர். இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார், கண்ணன் என்பவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? இல்லை வயதாகி விட்டதால் புத்தி தடுமாறி இவ்வாறு நடந்து கொள்கிறாரா? என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story