விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி காட்சி வாகனம்


விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி காட்சி வாகனம்
x

எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி காட்சி வாகனத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை வாயிலாக தேசிய எண்ணெய் பனை இயக்க திட்டத்தின் மூலம் எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காணொலி காட்சி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டும், சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்திடவும், நம் நாட்டிலே உற்பத்தி செய்து தன்னிறைவு அடையும் பொருட்டு மத்திய அரசு தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டம் மூலம் எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவித்து வருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 40 எக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்எண்ணெய் பனை திட்டம்-2023-24 திட்ட செயலாக்கத்திற்கு பொருள் இலக்காக 50 எக்டர் மற்றும் நிதி இலக்காக ரூ.27.338 லட்சம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் பனை கன்றுகள் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக எக்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5,250 வழங்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்திட அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும் டீசல், மின்சார மோட்டார் வாங்கிட மானியமாக ரூ.22 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது, என்றார். இந்த வாகனம் மூலம் நேற்று வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்றும் (சனிக்கிழமை) வேப்பந்தட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த வாகனம் வலம் வரும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் வட்டாரங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த காணொலி வாகனம் செல்லவுள்ளது. இதில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் துணை இயக்குனர் சரண்யா, உதவி இயக்குனர்கள், அலுவலர்கள், உதவி அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story