திருவள்ளூர் அருகே கனமழையால் குடிசை வீடு இடிந்து தொழிலாளி பலி


திருவள்ளூர் அருகே கனமழையால் குடிசை வீடு இடிந்து தொழிலாளி பலி
x

திருவள்ளூர் அருகே கனமழையால் குடிசை வீடு இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் பலியானார்.

திருவள்ளூர்

தொழிலாளி

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 67). கூலி தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள்(55). இவர் தனது மகன் சுரேஷ் (32), மருமகள் நந்தினி (30) பேரன் சுமித் (14), பேத்தி சுனிதா (12) ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். தேவன் அவரது மனைவி முனியம்மாள் ஆகியோர் குடிசை வீட்டிலும், அதன் அருகே தளம் போட்ட வீட்டில் சுரேஷ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவன் தன் மனைவி முனியம்மாள், பேரன் சுமித் ஆகியோருடன் குடிசை வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.

வீடு இடிந்து சேதம்

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தேவன் வீட்டின் குடிசை வீட்டில் மண்ணால் கட்டப்பட்டிருந்த மண்சுவர் அதிக ஈரப்பதமாக காணப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி தேவன் மீதும், அவரது மனைவி முனியம்மாள், பேரன் சுமித் ஆகியோர் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது சுவரின் ஓரம் படுத்து இருந்த தேவன் மீது அதிக அளவு மண் சரிந்ததால் அவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து ரத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். மையப் பகுதியில் படுத்து இருந்த முனியம்மாள், சுமித் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதனால் காயமடைந்த மேற்கண்ட 3 பேரும் அலறி கூச்சலிட்டனர்.

தொழிலாளி பலி

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுரேஷ் அவரது மனைவி நந்தினி மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து இடிபாடுகளில் சிக்கிய தேவன், முனியம்மாள், சுமித் ஆகியோரை பத்திரமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் தொழிலாளி தேவன் பரிதாபமாக இறந்து போனார். லேசான காயம் அடைந்த முனியம்மாள், அவரது பேரன் சுமித் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நேரில் ஆறுதல்

மேலும் சம்பவம் நடந்த வீட்டை திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், ஊராட்சி செயலாளர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தேவன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்மழையால் வீட்டின் மண் சுவர் சரிந்து விழுந்து இறந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story