இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை; பதற்றம்-போலீஸ் குவிப்பு


இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை; பதற்றம்-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 2:30 AM IST (Updated: 12 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக்கொலை

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் உள்பட காந்திநகர் காலனியை சேர்ந்த ஒருதரப்பினருக்கும், சிந்துவம்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை ஜெயமங்கலம் நால்ரோடு அருகே இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது இருளப்பனுடன் வந்தவர்கள் தப்பிஓடிவிட்டனர். இருளப்பன் மட்டும் அங்கு இருந்தார். இதனால் சிந்துவம்பட்டியை சேர்ந்த தரப்பினர் இருளப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில், நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தனிப்படை விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு இறந்து கிடந்த இருளப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் துணை சூப்பிரண்டு கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதற்றம்-போலீஸ் குவிப்பு

இதற்கிடையே இருதரப்பினர் மோதல் மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து ஜெயமங்கலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருதரப்பினர் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story