அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி


அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி
x

காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறிவிழுந்ததில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் அருகே உள்ள காரப்பாக்கம் சப்தகிரி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் குன்றத்தூர் சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அருள் (47), பிரவீன் (20) ஆகிய 3 பேரும் இறங்கினர். அப்போது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, செந்தில்குமார் என்ற தொழிலாளி தவறி தொட்டியில் விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் அவரை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த இன்ஸ்பெக்டர் முருகன் தலைமயிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனியார் நிறுவனம் சார்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 பேர் வந்ததாகவும், அதில் செந்தில்குமார் தவறி விழுந்ததால் விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story