சாலை விபத்தில் டிரைவர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..!


சாலை விபத்தில் டிரைவர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..!
x

கார்த்திக்

சாலை விபத்தில் டிரைவர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில் அவரை அடித்துக்கொன்றதாக போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.

சென்னை

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஆயில் மில் பஸ் நிலையம் அருகே மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 48) என்பவர் கடந்த மே மாதம் 5-ந் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்ததாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மே மாதம் 24-ந் தேதி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான குமார் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் பள்ளிக்கரணை கோவலன் நகர் 8-வது தெருவை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் குமார் சாலை விபத்தில் இறக்கவில்லை. நான் தான் கொலை செய்தேன் என்று கூறி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். அவர், கார்த்திக்கை பள்ளிக்கரணை போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் கார்த்திக், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கடந்த மே மாதம் 5-ந்தேதி நானும், குமாரும் ஒன்றாக மது அருந்தும்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், குமாரை கண் மூடித்தனமாக அடித்து, கையால் அவரது முகத்தில் குத்தியும், காலால் மார்பில் எட்டி உதைத்தும் காயப்படுத்தினேன். இதில் படுகாயம் அடைந்த அவரை வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்ததாக கூறி வெங்கடேஷ் என்பவர் மூலம் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். மேலும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரையும் இது விபத்து என நாடகமாடி நம்பவைத்தேன் என அவர் கூறினார்.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் விபத்தால் குமார் உயிரிழந்ததாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story