சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதலாக ஒரு மோப்ப நாய் சேர்ப்பு - புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் தேர்ந்தது


சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதலாக ஒரு மோப்ப நாய் சேர்ப்பு - புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் தேர்ந்தது
x

சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதலாக ஒரு மோப்ப நாய் ‘இரினா’ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாய், புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றதாகும்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், விமான நிலைய சரக்கக பிரிவு ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருகின்றன. தங்கம் மற்றும் மின் சாதன பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டன.

ஆனால் தற்போது போதை பொருட்கள், போதை மாத்திரைகள், புகையிலை பொருட்களான சிகரெட், பதப்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவை அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளையும், கார்கோவில் சரக்கு விமானங்களில் வரும் அனைத்து பார்சல்களையும் சோதனை செய்வது மிகவும் கடினமானது.

இந்த சோதனையில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு உதவி புரிவதற்காக பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை பயன்படுத்த சுங்க இலாகா தலைமை முடிவு செய்தது. அதன்படி 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை விமான நிலைய சுங்க இலாகாவில் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி என்ற பகுதியில் சுங்க இலாகா, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் மையம் உள்ளது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு 'ஓரியோ', 'ஆர்லி' என்ற பயிற்சி பெற்ற ஒரு வயதுடைய, 2 மோப்ப நாய்கள் கடந்த டிசம்பரில் வந்தன.

இந்த மோப்ப நாய்கள் பிறந்து 2 மாதங்களாக இருக்கும்போது பயிற்சிகள் தொடங்கப்பட்டு 10 மாத பயிற்சியை நிறைவு செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த மோப்ப நாய்களுக்கு 2 வயது நிறைவடைந்து உள்ளது.

அதில் 'ஓரியோ' மோப்ப நாய் போதை பொருட்களை மோப்பம் பிடித்து சுங்கத்துறையினருக்கு அடையாளம் காட்டுகிறது. 'ஆர்லி' என்ற மோப்ப நாய், வெடி பொருட்கள் போன்ற அபாயகரமானவைகளை கண்டுபிடித்து வருகிறது.

ஆனால் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அதிகளவில் போதை பொருட்கள் கடத்தப்படுவது, புகையிலை பொருட்களான வெளிநாட்டு சிகரெட் மற்றும் போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சாவும் அதிகமாக வரத் தொடங்கி உள்ளன.

இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவுக்கு மேலும் ஒரு மோப்ப நாயை சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி பஞ்சாப் மாநிலம் அட்டாரி பயிற்சியகத்தில் இருந்து 10 மாதங்கள் பயிற்சியை முடித்த 'இரினா' என்ற ஒரு வயது நாய் குட்டியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை வரவழைத்து மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில் உள்ள மோப்ப நாய்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த புதிய வரவான 'இரினா' மோப்ப நாய், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தனது பணியை தொடங்குகிறது.

இந்த 'இரினா' மோப்ப நாய், புகையிலை பொருட்களை கண்டு பிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றது என்பதால் இனிமேல் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை துல்லியமாக கண்டுபிடித்து சுங்கத்துறையினருக்கு அடையாளம் காட்டும்.

எனவே இனிமேல் வெளிநாடுகளில் இருந்து சிகரெட் பார்சல்கள், போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா போன்றவைகள் கடத்தி வரப்படுவதை சுங்க அதிகாரிகள் பெருமளவு பறிமுதல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story