"ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உலக அளவில் போற்றக்கூடியதாக அமைய வேண்டும்" - கனிமொழி எம்.பி.
“ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உலக அளவில் போற்றக்கூடியதாக அமைய வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.
ஆதிச்சநல்லூர்:
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி பேசியதாவது:-
தனிச்சிறப்பு
பழங்கால தமிழ் மக்களின் தொன்மை, வாழ்க்கைநெறி மற்றும் தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உண்டு. தொன்மையான தமிழ் செம்மொழி அந்தஸ்து கொண்டது. நமது பழங்கால தமிழ் மக்களின் பெருமையை, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?, அவர்களின் வாழ்வியல் எப்படி இருந்தது?, பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தது?. வாழ்க்கையில் என்னென்ன சாதனைகள் செய்தனர்? என்பதை அகழாய்வு செய்து உறுதிப் படுத்துவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுகள் என்பது இந்திய அளவில் நடக்கும் அகழாய்வுகளில் முக்கியமான ஒன்றாகும்.
அலெக்ஸாண்டர் ரியாவுக்கு பிறகு 100 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்திய தொல்லியல் துறை மூலம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கத்திலான வளையம் மூலம் நமது முன்னோர்கள் தங்கத்தின் பயன்பாட்டை அறிந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. மேட்டு பகுதியில் ஈமச்சடங்குகள் செய்து மக்களை புதைத்தது தெரியவருகிறது.
உலக அளவில்...
தமிழ்நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்படாத அளவுக்கு, சமீபத்தில் பராக்கிரமபாண்டியபுரத்தில், மக்கள் வாழ்ந்த ஊரை சுற்றி மிகப்பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு, அதன் உள்ளே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கான ஆதாரம் நமக்கு கிடைத்திருக்கிறது. இப்படி மிக சுவாரசியமாக இருக்கின்ற பல்வேறு விஷயங்களை அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நமக்கு சொல்லி கொண்டிருக்கிறது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி என்பது ஊர் கூடி இழுக்கக்கூடிய தேர் போன்றது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெறும் நேரத்தில், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, தொல்லியல் அதிகாரிகள், எழுத்தாளர்கள், தொல்லியலாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இழுத்த தேர்தான் இந்த அருங்காட்சியகம். அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தியாவிலேயே, உலக அளவிலேயே எல்லோரும் போற்றக்கூடிய அருங்காட்சியகமாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.