அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை


அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர், அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அ.தி.மு.க.வினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாட்டில் 500 பேருக்கு வேஷ்டி, சேலை உள்பட நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, தம்பிதுரை எம்.பி., திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வளர்மதி உள்பட முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆண்டு விழாவையொட்டி அ.தி.மு.க. அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. ஆண்டு விழாவின்போது விழா மலர் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் மலர் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story