தொண்டர்களின் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


தொண்டர்களின் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தொண்டர்களின் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருமண வரவேற்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

நேர கட்டுப்பாடு

டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 24 மணிநேரம் மும்முனை மின்சாரத்தை நான் வழங்கினேன். எந்த நேரத்தில் சென்றாலும் பம்ப்செட்டை இயக்கலாம். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. காலை முதல் மாலை வரை 5 மணிநேரம் மும்முனை மின்சாரம், இரவில் மும்முனை மின்சாரம் கொடுக்கிறார்கள். ஆனால் மின்தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறார்கள். மின்தட்டுப்பாடு இல்லை என்றால் எதற்காக நேர கட்டுப்பாடு கொண்டு வருகிறீர்கள்.

தி.மு.க. அரசாங்கம் வந்தாலே மின்தடை வந்துவிடும். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இரவில் 12 மணிக்கு போய் மின்மோட்டாரை இயக்கி நீர் பாய்ச்ச முடியும். இது கொடுமையான விஷயம்.

மின்வெட்டு

இது ஆட்சியாளர்களுக்கு தெரியுமோ, தெரியாதோ என்று தெரியவில்லை. தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு வரும். இப்போது மின்வெட்டு வந்துவிட்டது. அ.தி.மு.க. எப்போதும் விவசாயிகளுக்காக பாடுபடுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் சரி எப்போதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கும் உற்ற துணையாக இருக்கக்கூடியது அ.தி.மு.க. தான்.

நெற்பயிர் சிறப்பாக விளைச்சல் கொடுக்க வேண்டும். விளைச்சல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட காலத்தில் களை எடுப்பார்கள். அப்படி அ.தி.மு.க.வில் களை எடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அ.தி.மு.க. என்ற பயிர் செழித்து வளர்ந்து விளைச்சலை கொடுக்கும். அது எப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சிலர்

அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். சொந்த நலனுக்காக இருக்கிறார்கள். ஆனால் இங்கே கூடி இருக்கிற அத்தனை பேரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் இருக்கின்றனர். இங்கே தனிமனித ஆதிக்கம் கிடையாது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

இப்போதும் நான் தொண்டன் என்றுதான் என்னை சொல்கிறேன். தலைவன் என்ற வார்த்தையை எப்போதும் சொன்னது கிடையாது. தொண்டனோடு தொண்டனாக இருந்துதான் உங்களது ஆதரவோடு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

அ.தி.மு.க.வில் என்னை போல் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். எவனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் எவனாது வளர்ந்து வந்து இந்த கட்சியை ஆளுவான். அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை எவராலும் தொட்டு பார்க்க முடியாது. எவராலும் உரிமை கொண்டாட முடியாது.

இது தொண்டனால் ஆளக்கூடிய கட்சி. தொண்டனுக்கு தான் முக்கியத்தும் உண்டு. தொண்டன் தான் இந்த கட்சிக்காக உழைக்கின்றான். தொண்டனின் உழைப்பில் தான் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Next Story