எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது


எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது
x

எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை

தேர்தலை சந்திக்க தயார்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடி பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், வி.சி.ராமையா, பாசறை கருப்பையா, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை செயல்பாடாமல், திறனற்ற துறையாக, தலையில்லாத துறையாக உள்ளது என்று நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தேன். ஆனால் அந்த நிலை இன்னும் மாறவில்லை, மக்களும் நோயாளிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

37,500 மருத்துவ பணி நியமனம்

எம்.ஆர்.பி. செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த செவிலியர்களுக்கு பணி கொடுக்க இந்த அரசுக்கு மனமில்லை. இந்த 2½ ஆண்டுகளில் மருத்துவர் உள்ளிட்ட எந்த வித மருத்துவ பணி நியமனமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் 37 ஆயிரத்து 500 மருத்துவ பணி நியமனங்களை வெளிப்படையாக செய்தோம். தற்போது சுகாதாரத்துறை சீர்குலைந்த துறையாக உள்ளது. மருத்துவர்களையும், செவிலியர்களையும் மன மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டால் தான் அவர்கள் பணியை நிறைவாக செய்ய முடியும் என்பதால் தான் கடந்த ஆட்சியில் நாங்கள் மருத்துவர்களுக்கு பணிச்சுமை கொடுக்காமல் மருத்துவர்கள் மனநிலையை நன்றாக வைத்திருந்தோம். ஆனால் இன்றைய ஆட்சியில் மருத்துவர்கள் மட்டுமல்லாது செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவ பணியாளர்களும் மிகுந்த மன வேதனைகளுடனும் மன உளைச்சலுடனும் பணியாற்றி வருகின்றனர்.

பல் மருத்துவக்கல்லூரி

இந்த ஆட்சியை விமர்சனம் செய்தும் இனி பயனில்லை, இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது, இனியாவது அரசும் சுகாதாரத்துறையும் விழிப்போடு செயல்பட வேண்டும். எந்த அரசு பணியாக இந்தாலும் வழக்கு போடுவார்கள். அதனை எதிர்கொண்டு பணி நியமனம் செய்யத்தான் அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர், அதனை பேசி முடித்து தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2½ ஆண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தாமதமாகி வருகின்றனர். தற்போது இதனை நான் சுட்டிக்காட்டி உள்ளேன் விரைவில் இந்த மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதார பணிகளை விரைவுப்படுத்துவது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் மாவட்ட தோறும் நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து டெங்குவை ஒழிக்க முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்போதாவது அரசு விழித்துக் கொண்டு டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும். அரசு மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகிறது. ஆனால் இந்த திட்டம் செயல்படாத நிலையில் தான் தற்போது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story