வேளாண் பட்ஜெட்; விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் இல்லை - ராமதாஸ்


வேளாண் பட்ஜெட்; விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் இல்லை - ராமதாஸ்
x

வேளாண் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் இல்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது.

2024-25ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் முதன்மையாக எதிர்பார்த்தது வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகலின் கோரிக்கை. ஆனால், மத்திய அரசு வழங்கும் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.100, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.75 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதுடன் தமிழக அரசு அதன் கடமையை முடித்துக் கொள்கிறது. அதனால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு அதிக அளவாக ரூ.2303 மட்டுமே கிடைக்கிறது. இது போதாது.

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. ஆனால், மத்திய அரசு தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கான கொள்முதல் விலையாக ரூ.2919 மட்டுமே அறிவித்துள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால் குறைந்தது ரூ.1,000 ஊக்கத்தொகை சேர்த்து டன்னுக்கு ரூ.4,000 பரிந்துரை விலையாக அறிவித்திருக்கலாம். அதை சர்க்கரை ஆலைகளே வழங்கியிருக்கும். அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருக்காது.

ஆனால், தமிழக அரசோ, நடைபெற்று முடிந்த பருவத்திற்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், டன்னுக்கு ரூ.3,134 மட்டுமே கிடைக்கும். இதைக் கொண்டு செலவை கூட ஈடுசெய்ய முடியாது.

தமிழகத்தில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது தி.மு.க. வலியுறுத்தி வந்தது. ஆனால், ஆளுங்கட்சியாக வந்தவுடன் அந்த வாக்குறுதியை வசதியாக காற்றில் பறக்கவிட்டு விட்டது.

கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிக செலவு ஆகாது. ஆனாலும், விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாததால் அந்தத் திட்டத்தை நடப்பு நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிக்கவில்லை.

குறுவை பருவத்தில் மேட்டூர் அணையிலிருந்து போதிய அளவில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் முழுமையாக கருகி விட்டன. ஒன்றரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், சம்பா/தாளடி பருவத்திலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் பல லட்சம் ஏக்கரில் விளைச்சல் குறைந்தது. இப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

விவசாயிகலின் வருவாயைப் பெருக்கவோ, பாசனப் பரப்பை அதிகரிக்கவோ எந்த திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப் படும் என்று 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், நடப்பாண்டிலும் அதே அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான விவசாயிகள் அங்காடிகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான சிறப்பு வேளாண் கிராமங்கள், புதிய பயிர்வகைகளை பயிரிடச் செய்வதற்கான ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை. ஆனால், விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் நோக்கமே அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவே இல்லை. 2024-25ம் ஆண்டில் கூட வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.11,194 கோடியாகவே உள்ளது. நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் வேளாண்துறை மானியக் கோரிக்கையை வேளாண் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்வதால் எந்த பயனும் இல்லை.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணைகள் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளனவே தவிர ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.

வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது தமிழகத்திற்கு புதியது. அதனால், முதல் 3 நிதிநிலை அறிக்கைகளில் தடுமாற்றங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நான்காவது அறிக்கையும் பயனற்ற ஆவணமாக இருப்பது விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழக அரசு தோற்று விட்டதையே காட்டுகிறது."

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story