விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிச்சாமி கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை, நிதி, கூலி ஆகியவற்றை குறைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தா.பழூரில் கழிவறை வசதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்புதல், அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, மயான வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சின்னத்துரை, செந்தாமரை, செல்வராஜ், உமாதேவி, காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story