தீபாவளியை முன்னிட்டு அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ந்தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர். சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள்.
அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஆம்னி பஸ்களிலும் புக்கிங் செய்து வருகின்றனர். ரெயிலில் இடம் கிடைக்காத சாமான்ய மக்கள் அரசு சிறப்பு பஸ்களை எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு பஸ்களில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21-ந்தேதி பயணம் செய்ய 23 ஆயிரம் பேரும், 22-ந்தேதிக்கு 21 ஆயிரம் பேரும், 23-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது- தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு பஸ் பயணம் அதிகரித்துள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகின்றார்.
வழக்கம் போல தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு 10-ந்தேதி வெளியாகும். முதல் கட்டமாக 450 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ந்தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.