அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்


அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
x

Image Courtacy: ANI

அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் தனது ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் தனது ஆதரவு இல்லை என்றும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை.

ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதை விட நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என நம்பினோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை.

அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கு, துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவு அளிக்காது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும். இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம்.

இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன்" என்று டிடிவி தினகரன் கூறினார்.


Next Story