அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2023 11:15 PM GMT (Updated: 3 Sep 2023 11:15 PM GMT)

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தாம்பரத்தில் 15-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

4 நாள் பொதுக்கூட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15-9-2023, 16-9-2023, 17-9-2023 மற்றும் 19-9-2023 ஆகிய 4 நாட்கள், 'பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 20-8-2023 அன்று மதுரையில் நடைபெற்ற கட்சியின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள்' கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது.

அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-9-2023 அன்று பேரறிஞர் அண்ணாவினுடைய உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தாம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

15-ந்தேதி தாம்பரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதேபோல், பொன்னேரியில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்பட பல்வேறு பகுதிகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.


Next Story