அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது - அமித் ஷா சொன்னார் முன்னே...! இபிஎஸ் உறுதிசெய்தார் பின்னே... !
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே தவறான தகவலை நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சிரழிந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.
ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏழை எளிய மக்களுக்காகதான் அவர் கொடுத்திருக்கிறார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையிலே அட்சய திட்டத்துக்கு நிதியை ஆளுநர் கொடுத்துள்ளார். விழுப்புரம் நகரத்தில் 2 போதை ஆசாமிகள் முகமது இப்ராஹிம் என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழ்நாட்டில் பா.ஜ.க. அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறது என உறுதிப்பட கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சை அடுத்து தற்போது எடப்பாடி பழனிசாமியும் பாஜக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.