எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!


எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
x

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட அக்கட்சியின் சட்டத்திட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட தனது ஆதரவாளர்கள் உடன் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சமீபத்தில் சந்தித்து பேசினார். டி.டி.வி.தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, "அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்துவோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்படுகிறார்" என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை எதிர்கொள்வதற்கு என்ன மாதிரியான யூகங்களை வகுக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் மற்றும் சட்டத்திட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது குறித்தும் பேசப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story