செஞ்சி அருகே அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு போலீசாருடன் வாக்குவாதம்-போராட்டம்


செஞ்சி அருகே    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு    போலீசாருடன் வாக்குவாதம்-போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

செஞ்சி அருகே அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


செஞ்சி,

தமிழகத்தில் பால், மின்கட்டணம், சொத்து வரி உர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து இருப்பதாகவும் கூறி தி.மு.க. அரசை கண்டித்து நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியம் நாட்டார் மங்கலத்தில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்று கண்டன உரையாற்றுவதற்காக மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. காரில் வந்து கொண்டிருந்தார்.

போட்டி கோஷம்

இதனிடையே தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் மற்றும் தி.மு.க.வினர் அங்கு வந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை வரவேற்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அப்போது தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதை பார்த்த அ.தி.மு.க.வினர் பதிலுக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். போட்டி கோஷங்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், இரு கட்சியினரும் மோதிக்கொள்ளும் அசாதாரன சூழலும் அங்கு நிலவியது.

சாலை மறியல்

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சி நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது, அ.தி.மு.க.வினர் எங்களுக்கு இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்துவிட்டு, தி.மு.க.வினரை எப்படி இங்கு அனுப்பி வைத்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தும், அவர்கள் மறியலை கைவிடவில்லை.

பரபரப்பு

அந்த சமயத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் அங்கு வந்தார். தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசி, மறியலை கைவிடுமாறு கூறினார். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இதன் பின்னர், அங்கு அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வால் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை பேரவை ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம், மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story