அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி, திருத்தங்கள் கொண்டு வர தடையில்லை: சென்னை ஐகோர்ட்


அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி, திருத்தங்கள் கொண்டு வர தடையில்லை: சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 22 Jun 2022 3:25 PM GMT (Updated: 22 Jun 2022 4:12 PM GMT)

நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. பொதுக்குழு நடத்தவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுக்குழுவில் என்ன தீர்மானம் இயற்ற வேண்டும்? என்பதை அக்கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அதில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதனால் எந்த ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கிற்கு அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கிறேன் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் முழு விவரம்;

சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளில், "அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக உள்ளோம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே இந்த கூட்டங்களை கூட்ட அதிகாரம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்" என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதால், வழக்கை 22-ந் தேதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் முத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் வாதத்தை தொடங்கியுள்ளார். பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து அஜெண்டா இது வரை வெளியிடப்படவில்லை என்றும் சண்முகம் தரப்பு கூறியது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன்.23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என்று நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி தரப்பில் வாதிடும் போது,

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர்கள் இணைந்தே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல.

பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளதுஇதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை.பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது. கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும்

பொதுகுழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் தர முடியாது. பொதுக்குழுவில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். பொதுகுழுவில் எந்த உறுப்பினரும் குரல் எழுப்பலாம். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது; மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து விதிகளை மாற்ற, திருத்தி அமைக்க அதிகாரம் உள்ளது.பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானதுதான். ஆனால் அங்கு என்ன முடிவெடுப்பது என்பதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய முடியும்.கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு; பொதுக்குழு நிகழ்ச்சி நிரலை இருவரும்தான் முடிவு செய்ய முடியும்.

நேற்று அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கபட்டு விட்டது . வேறு அஜெண்டா ஏதும் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவுக்கு செல்ல முடியாது; நடக்கப்போவது என்ன என்பது ஒருங்கிணைப்பாளருக்கு முன்கூட்டியே தெரிய வேண்டும் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என வாதிடப்பட்டது.

பொதுக்குழுவில் திடீரென யாராவது எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமானால் என்ன செய்வது? நீதிபதி ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒரு விவகாரத்தை முன்மொழிவது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு என வாதிட்டது.

அனைவரும் பொதுக்குழு நடத்தலாம் என தெரிவிக்கின்றனர் . பொதுக்குழு நடத்தலாம், கட்சி விதிகளில் திருத்தம் கூடாது என மனுதாரர் தரப்பு தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணை 3 மணி நேரத்தை கடந்து சென்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளது.


Next Story