அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே விருப்பமனு தாக்கல்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உறுப்பினர்கள் பலர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளை பிற்பகல் 3 மணிவரை விருப்பமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் நாளை விருப்பமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story