ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஈரோடு,

ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுகவை காப்பாற்றி வைத்தனர். அவர்கள் காப்பாற்றி வைத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

முதல்-அமைச்சராக இருந்த போது மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த சாதனையையும் செய்யாதவர் எடப்பாடி பழனிசாமி. கலெக்ஷன், கரெப்ஷன், கமிஷன் ஆகியவற்றால்தான் அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை ஏற்காத உதய் திட்டத்தை ஏற்றவர்தான் பழனிசாமி.

ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜகவின் பேச்சை கேட்டு தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி கெடுதல் செய்துள்ளார். நீட் விவகாரம், உதய் மின் திட்டம், மேகதாது அணை பிரச்னையில் இணக்கமாக சென்றவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு துரோகம் செய்தவர்.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பொய்களை கூறியுள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில் மக்கள் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அதிமுகவை தூக்கி எறிந்தார்கள்.

ஈரோடு தேர்தல் களத்தில் எத்தனை முகமூடிகள் போட்டாலும், இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எறியப்படும். ஈரோடு தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

"மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நினைவுச்சின்னம் அரசு பணத்தில் அமைக்கப்பட்டதா? கட்சி நிதியில் அமைக்கப்பட்டதா?" என பேனா நினைவுச்சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.


Next Story