அதிமுக பொன்விழா மாநாடு பிரசார வாகனம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டது. ரதம் போல தயார் செய்யப்பட்ட இந்த வாகனம் நேற்றிரவு சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சேலம்,
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். இந்த மாநாட்டை மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு இந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தயாராகி வருகிறார்கள். இதற்காக பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கட்சியினர் இடையே மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டது. ரதம் போல தயார் செய்யப்பட்ட இந்த வாகனம் நேற்றிரவு சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த வாகனத்தின் பிரசார தொடக்க விழா நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் இன்று காலை நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மதுரை பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டின் தொடக்க விழா பாடல் இந்த பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த பிரசார வாகனம் இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிரசார வாகனத்துடன் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேர் வாகனங்களில் செல்கிறார்கள். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வருகின்ற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த வாகனம் இயக்கப்படவுள்ளது.