'அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி


தினத்தந்தி 20 Aug 2023 4:11 AM GMT (Updated: 20 Aug 2023 4:26 PM GMT)

மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றது.


Live Updates

 • 20 Aug 2023 1:49 PM GMT

  மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான் - எடப்பாடி பழனிசாமி

  மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் - எடப்பாடி பழனிசாமி

 • 20 Aug 2023 1:47 PM GMT

  எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது...!

  மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது


 • 20 Aug 2023 1:15 PM GMT

  அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி

  அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. கடைக்கோடி சாமானியனுக்கும் நன்மை கிடைத்தது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக செயல்பட்டு காட்டிய அரசு அதிமுக அரசு.

  அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது ஏனென்றால் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன் - எடப்பாடி பழனிசாமி

 • 20 Aug 2023 1:02 PM GMT

  இந்த 51 ஆண்டுகாலத்தில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக - எடப்பாடி பழனிசாமி

  இந்த பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக.

  1972 அக்டோபர் 17-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை தோற்றுவித்தார். இன்று அதிமுக பொன்விழா கொண்டாடி 51ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டுகாலத்தில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 • 20 Aug 2023 12:45 PM GMT

  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவை வணங்கி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் உண்மை விசுவாசமிக்க தொண்டர்களே என கூறி எடப்பாடி பழனிசாமி தன் உரையை தொடங்கினார். 

 • அதிமுக மாநாடு மேடைக்கு வந்த ஈபிஎஸ்...!
  20 Aug 2023 11:41 AM GMT

  அதிமுக மாநாடு மேடைக்கு வந்த ஈபிஎஸ்...!

  மதுரையில் நடைபெறும் அதிமுகவின் பிரமாண்ட மாநாட்டில் மேடைக்கு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

  அதிமுக மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

 • நமக்கு சுருக்கி பேசி பழக்கம் இல்ல! திமுக-வை கருக்கி பேசி தான் பழக்கம் – நடிகை விந்தியா கல கல பேச்சு!
  20 Aug 2023 11:11 AM GMT

  நமக்கு சுருக்கி பேசி பழக்கம் இல்ல! திமுக-வை கருக்கி பேசி தான் பழக்கம் – நடிகை விந்தியா கல கல பேச்சு!

  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், அதிமுகவின் கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா,

  பொதுவாகவே நான் சிறிய மேடை 1 மைக் இருந்தாலே அரை மணி நேரம் பேசுவேன். ஆனால், இன்று கடல் மாதிரி கூட்டம் எவ்வளவு பெரிய மேடை இந்த பிரமாண்ட மேடையில் என்னை சுருக்கி பேச சொல்றாங்க.

  எனக்கு எப்போதும் சுருக்கி பேசி பழக்கம் இல்லை திமுக-வை கருக்கி பேசித்தான் பழக்கம். எனவே எனக்கு சுருக்கி பேசியெல்லாம் வராது. முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன். குள்ளநரி கூட்டத்திற்கு நடுவே, ஆட்சி செய்தவர் எடப்பாடியார். துரோகிகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இன்று எடப்பாடியார் இருக்க அவர் செய்த மக்கள் பணி தான் காரணம்.

  கருணாநிதி, ஸ்டாலினை, ஸ்டாலின் உதயநிதியை தேர்வு செய்தது போல அல்லாமல், நம் தலைவர்கள் தொண்டர்களால் தேர்வானார்கள். நம் தலைவர்கள் ஒன்னும் விடியல் தருவதாக சொல்லி மக்கள் பணத்தை பறிக்க சட்டம் போட்டவர்கள் அல்ல . குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர்கள்.

  மக்களுக்காக மக்கள் திலகம் ஆரம்பித்த கட்சி தான் நம்மளுடைய அதிமுக கட்சி .மக்களால் நான் மக்களுக்காகவே நான் கூறியவர் அம்மா. அப்பன்களால் நம் தலைவர்கள் உருவாகவில்லை. கோடானகோடி தொண்டர்களால் உருவானவர்கள்.தமிழகத்தை ஆட்சி செய்ததிலேயே அதிகமுறை ஆண்ட கட்சி அதிமுக தான்.

  எங்களுடைய இந்த பெரிய எழுச்சியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், எங்கள் சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும், நாங்கள் இருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லாட்சி தருவோம் என மக்களுக்கு தெரியபடுத்துவதற்கு தான் இந்த பிரமாண்ட மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்” என விந்தியா கூறியுள்ளார்.

 • 20 Aug 2023 9:02 AM GMT

  மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக எழுச்சி மாநாட்டில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

 • 20 Aug 2023 6:32 AM GMT

  அதியமான் அவ்வைக்கு கொடுத்தது நெல்லிக்கனி.. ஜெயலலிதா நமக்கு கொடுத்த தங்க கனி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வளர்மதி புகழ்ந்து பேசினார்.

 • “மதுரை மாநாடு தான் எனக்கு முக்கியம்“ ஆபரேஷன் செய்து கொண்ட மனைவியோடு 250 கி.மீ டூவிலர் பயணம் செய்து மாநாட்டிற்கு வந்த நிர்வாகி...!
  20 Aug 2023 6:28 AM GMT

  “மதுரை மாநாடு தான் எனக்கு முக்கியம்“ ஆபரேஷன் செய்து கொண்ட மனைவியோடு 250 கி.மீ டூவிலர் பயணம் செய்து மாநாட்டிற்கு வந்த நிர்வாகி...!

  மதுரையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டிற்காக, கும்பகோணத்தில் இருந்து வயதான தம்பதி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். தஞ்சை மாவட்டம், கோவிலடியை சேர்ந்த தம்பதி இளங்கோவன் மற்றும் வசந்தா. அதிமுக உறுப்பினரான இளங்கோவன், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மனைவியுடன், சுமார் 250 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.


Next Story