கரூரில் டிச.29 ஆம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கரூரில் டிச.29 ஆம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,


அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற இருந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்ததால், கரூர் மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினருமான எஸ்.திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் விடுவித்து உள்ளனர்.

கடந்த 20-ந்தேதி மாலை, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் கே.என்.ஆர். சிவராஜ், கரூர்-ஈரோடு வேலுச்சாமி புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தி.மு.க.வை சேர்ந்தவர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்தி சென்று, ஆயுதங்களால் கடுமையாக தாக்கி விட்டு பின்னர் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளனர். சிவராஜை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த சிவராஜ் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

சிவராஜ் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த செயல்களை தி.மு.க. அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசின் முழு ஒத்துழைப்போடு, தி.மு.க.வினர் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் வன்முறை செயல்களை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story