அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கோஷ்டி மோதல்


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கோஷ்டி மோதல்
x

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

மீண்டும் சலசலப்பு

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்-அமைச்சர் யார்? என்ற விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உண்டானது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். பிளவுபட்ட அ.தி.மு.க.வும் ஒன்று சேர்ந்தது.

தற்போது 'ஒற்றை தலைமை' விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'ஒற்றை தலைமை' வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடம்பிடிப்பதாலும், 'இரட்டை தலைமை' நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் விடாபிடியாக இருப்பதாலும் அக்கட்சியில் கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. இருதரப்பினரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம்

கடந்த 16-ந்தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி காரை முற்றுகையிட்டும், காரை கைகளால் தட்டியும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியதும், ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை செயல்பாட்டுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்று, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதை தீர்மான குழு உறுப்பினரான டி.ஜெயக்குமார் சூசகமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 16-ந்தேதி மவுனத்தை கலைத்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று தனது விருப்பதையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

தள்ளுமுள்ளு-வாக்குவாதம்

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11.10 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவரது ஆதரவாளர்கள் 'அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையே' என்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். கட்சி அலுவலக வளாகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் தனித்தனியாக பிரிந்து நின்று நீயா? நானா? என்பது போல் மாறி, மாறி கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காலை 11.32 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால், இந்த முறை ஜெயக்குமார் தனது ஆதரவாளர்கள் படைஆழ வந்திருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் அவரை அரண் போன்று சுற்றி அழைத்து வந்தனர். அப்போது டி.ஜெ (டி.ஜெயக்குமார்) வாழ்க... என்று கோஷங்கள் எழுப்பபட்டது. அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. இதற்கிடையே ஜெயக்குமார் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தபோது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார்.

மோதல்

இந்த நிலையில் ஜெயக்குமாருடன் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்துவை மடக்கி திடீரென்று கும்பல் தாக்கியது. இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

சட்டையில் ரத்தக் கறையுடன் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' ஜெயக்குமாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் அறைக்கு சென்றுவிட்டு நான் திரும்பியபோது, நீ எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தானே என்று சொல்லி என்னை அடித்தார்கள். எல்லாம் வெளி ஆட்கள். ரவுடிகள் போன்று இருந்தார்கள்.' என்றார்.

பின்னர் மாரிமுத்து, எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து தனக்கு நேரிட்ட நிலைமை குறித்து முறையிட்டார். அ.தி.மு.க. அலுவலக வளாகத்தில் அடிதடி மோதல், வாக்குவாதம் ஒருபுறம் நடைபெற, மற்றொரு புறம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீர்மானக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் கூட்டம் முடிந்து ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் வெளியே வந்த போது மீண்டும் பரபரப்பு, பதற்றம் தொற்றிக்கொண்டது. ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், ஜெயக்குமாரை அவரது ஆதரவாளர்களும் அழைத்து சென்றனர்.

அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் பொதுக்குழு கூட்டத்தில் வன்முறை ஏற்படுவதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. எனவே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் போலீஸ் பாதுகாப்பு, தனியார் பாதுகாப்புடன் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story