வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரவேண்டும்


வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரவேண்டும்
x

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி நிதி மூலம் நடைபெற உள்ள பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை மந்திரி துரைமுருகன், நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், இந்த பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் செப்டம்பர் 15-ந் தேதிக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டுத்திட்டப் பணிகள், நீர்வள, நிலவள திட்டப்பணிகள் ஆகியவற்றை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.434 கோடியில் நடைபெற்று வரும் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய், அடையாறு ஆற்றினை அகலப்படுத்தும் பணி, கொசஸ்தலை ஆற்றின் வெள்ளக்கரை அமைக்கும் பணி, சென்னை மாநகரில் அமைந்துள்ள முக்கிய ஏரிகளில் நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, செம்மஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் மேம்படுத்தும் பணி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மாதவரம் ரெட்டை ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story