அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவி குழுவில் சேர வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவி குழுவில் சேர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
கிராமசபை கூட்டம்
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட வேப்பம்பாளையம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரபுசங்கர் கலந்து ெகாண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும். நம்மளுடைய குழந்தைகள் அனைவரும் கல்வி பெறுவது மட்டுமல்லாமல் உயர் கல்வி படிப்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்லூரி படிப்பை முடிக்கும் வரை பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது, என்றார்.
நொய்யல்
வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணாநகர் விநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்று பேசினார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம் குறித்து தெரிவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து தெரிவித்தல், வேட்டமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஊராட்சியை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் என்பன உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோப்புப்பாளையம் ஊராட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தார்.
திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் பாலு வரவேற்று பேசினார். என்.புகளூர் ஊராட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் இந்து வரவேற்று பேசினார். இந்த கூட்டங்களில் ஊராட்சி உறுப்பினர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், செவிலியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.