அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா ? - பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பதில்


அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா ? -  பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பதில்
x

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்குமா ? என்ற கேள்விக்கு என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பதில் கூறியுள்ளர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாஜக சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சொத்து வரி மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துமே மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசு உயர்த்த சொன்னதால்தான் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழக அரசு வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு தெரிவித்தது. அதை மறைத்து விட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களை அமைச்சர் கூறி வருகிறார்.

இதே போல விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்பட்டு வருகிறது. அதற்கும் மத்திய அரசு மீது குறை சொல்கிறார் அவர். குறை சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதை எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் நானும் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினோம். அதன் பிறகு தான் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், காவல்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என நிருபர்கள்கேட்டதற்கு, "வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறோம்" என்று பதிலளித்தார்.


Next Story