யாருடன் கூட்டணி..? - தே.மு.தி.க. உயர்மட்ட குழு நாளை ஆலோசனை


யாருடன் கூட்டணி..? - தே.மு.தி.க. உயர்மட்ட குழு நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 8 Feb 2024 12:15 PM IST (Updated: 8 Feb 2024 12:16 PM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அப்போது, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தனித்தனியாக கூட்டணி குறித்து தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலையும் மனதில் வைத்து நாம் கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தே.மு.தி.க. உயர்மட்ட குழு நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவைத் தலைவர் இளங்கோவன், கட்சியின் துணைப் பொதுசெயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


Next Story