கல்வியோடு மொழித்திறன் சார்ந்த படைப்பாற்றலை மேம்படுத்த வேண்டும்


கல்வியோடு மொழித்திறன் சார்ந்த படைப்பாற்றலை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:47 PM GMT)

கல்வியோடு மொழித்திறன் சார்ந்த படைப்பாற்றலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கலைப்போட்டிகள் தொடக்க விழா நேற்று விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில் அனைவரையும் வரவேற்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மொழி, இலக்கியம், இலக்கணம் போன்றவற்றில் புலமைப்பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்று. அந்த வகையில் இன்றைய தலைமுறை மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மொழி மற்றும் வரலாற்று சார்ந்த தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம் தமிழ்மொழியின் மாண்பு காக்கப்படுவதோடு, அடுத்துவரும் தலைமுறையினருக்கு தங்களால் பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம் தமிழ்மொழி பன்னெடுங்காலத்திற்கு தழைத்தோங்கும்.

மேலும் கல்லூரி மாணவ- மாணவிகள் கல்வியோடு தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ- மாணவியரும் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வி பயில்வதோடு, தங்களுடைய தனித்திறனை மேம்படுத்திக்கொண்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் போட்டி ஒருங்கிணைப்பாளர்களான உதவி பேராசிரியர்கள் கவிதா, பழனி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story