என் பிரெண்ட போல யாரு மச்சான்... நாய்களுடன் நட்பு பாராட்டும் அதிசய குரங்கு


என் பிரெண்ட போல யாரு மச்சான்... நாய்களுடன் நட்பு பாராட்டும் அதிசய குரங்கு
x

அரியலூர் அருகே நாய்களுடன் நட்புடன் விளையாடி காண்பவர்களை ஒரு குரங்கு வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி காமராஜர் நகர் பகுதியில் தா.பழூர் - இடங்கண்ணி செல்லும் சாலை ஓரத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்து ஒரு ஒற்றை ஆண் குரங்கு சுற்றி திரிந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக காமராஜர் நகர் பகுதியில் பகல் முழுதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து உணவு தேவைகளை முடித்துக் கொண்டு காமராஜர் நகர் அங்கன்வாடி அருகே வந்து விடுகிறது. அதே பகுதியில் வீதியில் சுற்றி திரியும் சில நாய்க்குட்டிகளும் அந்தப் பகுதிக்கு மாலை நேரங்களில் வந்து விடுகின்றன.

கூட்டத்திலிருந்து பிரிந்த குரங்கிற்கு சேட்டைகள் செய்ய ஏற்ற நட்பு வட்டாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தது. அப்பகுதி மனிதர்களிடம் இயல்பாக சேட்டை செய்து வந்த குரங்கு அவ்வப்போது நாய்களிடம் சேட்டை செய்ய துவங்கியது. எல்லா நாய்களும் அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இரண்டு நாய்க்குட்டிகள் அந்த சேட்டைகளுக்கு ஏற்றவாறு குரங்கோடு சேர்ந்து விளையாட துவங்கின.

இதனால் குரங்கிற்கு எல்லை இல்லா ஆனந்தம். எங்கு சுற்றி திரிந்தாலும் மாலை 5 மணி அளவில் குரங்கும் நாய்களும் மணி அடித்தது போல வந்து ஒன்று சேர்ந்துவிடும். பின்னர் இருள் சூழ்ந்து தூங்க செல்லும் வரை விடாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பதை நாய்களும் குரங்கும் வாடிக்கையாக கொண்டுள்ளன.

வழக்கமாக குரங்கோடு நாய்கள் பகையாகவே இருக்கும். அதனால் கூட்டத்திலிருந்து பிரிந்து நட்பு வேண்டி நாய்களுடன் பழக துவங்கிய குரங்கைப் பார்த்த அப்பகுதி மக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த தகவலை கேள்விப்படும் சுற்று வட்டார பகுதி மக்களும் தொடர்ந்து மாலை வேலைகளில் அந்த குரங்கு நாய்களுடன் விளையாடும் அழகை பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.


Next Story