ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலி; தந்தை உள்பட 4 பேர் படுகாயம்
ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலியானார். அவரது தந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில், மணியை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க, டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மணி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மணியுடன், அவரது மகள்கள் ஜெயா (55), விஜயா (52) ஆகியோர் சென்றனர். ஆம்புலன்சை கம்பத்தை சேர்ந்த குமார் (39) என்பவர் ஓட்டினார். டெக்னீசியன் ராஜாவும் (40) உடன் வந்தார்.
தேனி அருகே முத்துதேவன்பட்டி புறவழிச்சாலையில் அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் குமார், ராஜா, மணி, விஜயா ஆகிய 4 பேரும் ஆம்புலன்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.