பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே தகராறை தட்டிக்கேட்ட போது கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த போலீஸ்காரர் பலி


பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே தகராறை தட்டிக்கேட்ட போது கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த போலீஸ்காரர் பலி
x

தகராறை தட்டிக்கேட்க சென்ற போது, கல்லால் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (வயது 32). இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு தனது மைத்துனர் வாசு என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றார். அப்போது வாசுவின் நண்பர் அஜ்மல் செல்போனில் தொடர்பு கொண்டு பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே கண்ணன் காலனி ரெயில்வே நடைபாதையில் மர்மகும்பல் ஒன்று தன்னை அடித்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே வாசு தனது மாமாவும் போலீஸ்காரருமான விஜயனை அழைத்து அங்கு விரைந்து சென்றார்.

அங்கு மதுஅருந்தும் விவகாரத்தில் அஜ்மலை கண்ணன் காலனியை சேர்ந்த 5 பேர் தாக்கியது தெரிந்தது. உடனே போலீஸ்காரர் விஜயன் அந்த கும்பலிடம் அஜ்மலை ஏன் அடித்தீர்கள் என தட்டி கேட்டு தகராறை விலக்கியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த கற்களை கொண்டு விஜயனை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் விஜயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுபற்றி பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் விஜயனை தாக்கி விட்டு தலைமறைவான கண்ணன் காலனியை சேர்ந்த அஜீத்குமார் (23), வினோத்குமார் (25), ரவிக்குமார் (25), விவேக் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஒடிய மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரங்கிமலை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story