திருத்தணி ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்- 'பிரேக்' பிடித்து சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர்


திருத்தணி ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்- பிரேக் பிடித்து சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர்
x

திருத்தணி ரெயில் நிலையம் அருகே விரைவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவரை எமெர்ஜென்சி பிரேக் அடித்து என்ஜின் டிரைவர் காப்பாற்றினார்.

திருவள்ளூர்

மும்பையில் இருந்து சென்னையை நோக்கி சென்ற சத்ரபதி சிவாஜி விரைவு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு திருத்தணி ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில் 2 நிமிடத்திற்கு பிறகு திருத்தணி ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, திரவுபதி அம்மன் கோவில் எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரெயிலின் எஞ்சின் கார்ட் ராமச்சந்திரன் உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் மோகன் உடனடியாக ரெயிலின் எமெர்ஜென்சி பிரேக்கை அழுத்தியதால் முதியவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

உடனடியாக முதியவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற முதியவர் காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 81) என்பதும், இவர் குடும்ப தகராறு காரணமாக விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருத்தணியில் அரை மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.


Next Story