மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை


மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை
x

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்க்குள் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்த மூதாட்டி, மணலி சி.பி.சி.எல். நகரைச் சேர்ந்த வடிவம்மாள் (வயது 72) என்பது தெரியவந்தது. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மூதாட்டி வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் நிலையில் நேற்று காலை அவர் மழைநீர் கால்வாயில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த ஆடைகள் கலையப்பட்டு உள்ளதாலும், நாக்கு கடித்த நிலையில் இருப்பதாலும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ஆவடி தடயவியல் துறை சார்பாக நிர்மலா தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story