முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு; வன்னியர் உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு; வன்னியர் உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது வன்னியர் உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தினார்.

திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

அப்போது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

உள்இடஒதுக்கீடு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சரை குழுவாக சந்தித்தோம். இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 2.5 சதவீதம், இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 7 சதவீதம் என வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு கூறிய காரணம், சரியான தரவுகள் இல்லை என்பதுதான்.

இந்த ஆண்டிலேயே...

அதன் பிறகு கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தமிழக அரசு மீண்டும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப வன்னியர் உள்இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜனவரியில் அரசாணை வெளியிட்டது. அதில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் 3 மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் 3 மாதங்களில் ஒரு மாதம் கடந்துவிட்டது. எனவே அதை விரைவுபடுத்தி இந்த ஆண்டே கல்வி, வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

தரவுகள் வேண்டும்

தமிழகத்தில் தலித் மற்றும் வன்னியர் ஆகிய 2 பெரிய சமுதாயங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த 2 சமுதாயங்களுமே தமிழகத்தில் 40 சதவீதம் உள்ளனர். இந்த 40 சதவீத மக்களும் முன்னேறினால் தமிழகம் முன்னேறும் என்ற சமூகநீதி அடிப்படையில்தான் இந்த பிரச்சினையை எடுத்துள்ளோம். இதனால் மற்ற சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் வராது. இது அவர்களுக்கு எதிரான இடஒதுக்கீடு அல்ல.

சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கான தரவுகளை வைத்து, அது சரியான இடஒதுக்கீடுதானா? என்பதை நியாயப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஏப்ரல் மாதம் கல்வி ஆண்டு தொடங்கிவிடும். எனவே அதற்குள்ளாக சம்பந்தப்பட்ட தரவுகளை அரசுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளிக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வேறு. அது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கானது. அது இதில் வராது. ஆனால் அதையும் தமிழகத்தில் நடத்த வேண்டும். தற்போது பீகாரில் அந்த கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.

எங்கள் கோரிக்கை

ஆனால் 20 சதவீத மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீடு என்பது, தற்போது அரசிடம் உள்ள தரவுகளின்படி முடிவு செய்யப்பட வேண்டியதாகும். கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீத மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 115 சமுதாயங்கள் உள்ளன. அவர்களில் எந்தெந்த சமுதாயங்கள் கல்வியில் வேலை வாய்ப்பில் எவ்வளவு இடங்கள் வாங்கியுள்ளனர்? அவர்களின் மக்கள் தொகை எவ்வளவு? வன்னியர்கள் எவ்வளவு பின்தங்கியுள்ளனர்? இந்த தரவுகளைத்தான் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது.

இந்தத் தரவுகளை 10 நாட்களில் எடுத்துவிட முடியும். இதை வேகப்படுத்த வேண்டும். இந்த கல்வி ஆண்டிலேயே அது கொண்டுவரப்பட வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை.

மற்ற பிரச்சினைகள்

அடுத்ததாக, தமிழகத்தில் உள்ள நீர் மேலாண்மை பிரச்சினைகள் பற்றியும் முதல்-அமைச்சரிடம் கூறினோம். தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு 500 டி.எம்.சி. காவிரி நீர் கடலில் வீணாக கலந்தது. வெள்ள காலத்தில் காவிரி நீரில் 3 டி.எம்.சி. உபரி நீர் மூலம் தர்மபுரி மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டம் அது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருகும்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் சோழர் பாசன திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்று உபரி நீரை அரியலூர் மாவட்டத்தின் அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். அங்கு தடுப்பணை கட்டவும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டோம்.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் எடுக்கும்படி கோரி உள்ளோம். இதற்காக மட்டும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் கூட போதைக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story