அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா இருப்பதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகப்படும்படி குடியிருக்கும் வாலிபர் ஒருவரின் அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 24), என்பதும், இவர் கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பட்டப் படிப்பை படித்தார் என்பதும், தற்போது பொத்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, ஒரு கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொத்தேரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.