ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்
41 அடி ஆஞ்சநேயர் சிலை
கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உடைய இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, மாலை தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம்
பின்னர் நேற்று 4-ம் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர், யாக சாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்கத்துடன் கலசத்தில் புனதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், மாலையில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.