நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுக்கு அண்ணாமலை அளித்த பதில்
நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்ததுபோல், நடிகர் விஜயும் குட்டிக்கதை, சில விமர்சனங்கள், அரசியல், சில சூசக பதில்கள் கொடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். அப்போது, ஒரே புரட்சி தலைவர், ஒரே நடிகர் திலகம், ஒரே சூப்பர்ஸ்டார், புரட்சி கலைஞர், கேப்டன், ஒரே உலகநாயகன், ஒரே தல என பதிலடி கொடுத்தார்.
பின்னர், தளபதி என்றால் என்ன அர்த்தம். மக்கள் தான் மன்னர்கள். நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார். அப்போது தொகுப்பாளர், 2026 என சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வருடத்தை குறிப்பிட்டு கேள்வியெழுப்புகையில், சில மழுப்பலான பதிலளித்த விஜய், இறுதியில் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக்கூறி அரங்கையே அதிரவைத்தார்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்றாலும், தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் விஜயின் பேச்சு தான் வைரலாகி வருகிறது. அவரது அரசியல் பயணம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் குறித்த பேச்சுக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்கையில், "ஒவ்வொருத்தர்கள் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என நான் முதலில் கூறியுள்ளேன். யார் அரசியலுக்கு வருவதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது. மக்களுக்கு தேர்வுகள் இருக்க வேண்டும்.
ஒரு கட்சி இருப்பதற்கு ஆறு கட்சி இருந்தால் இன்னும் நல்லது தான். 30, 40 ஆண்டுகளாக அரசியலில் பழையவர்களே இருந்திருக்கிறார்கள். நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். தங்களுடைய யோசனைகளை மக்களிடம் தெரிவிக்கட்டும். இறுதியில் மக்கள் யாரை முடிவுசெய்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.