பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு பதில்: முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்? ப.சிதம்பரம் விளக்கம்


பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு பதில்: முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்? ப.சிதம்பரம் விளக்கம்
x

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்? என்பதற்கு, ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.

இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


Next Story