பெரும் துயரில் அம்பத்தூர் தொழிற்சாலை: களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்


பெரும் துயரில் அம்பத்தூர் தொழிற்சாலை: களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்
x
தினத்தந்தி 8 Dec 2023 9:00 PM GMT (Updated: 8 Dec 2023 9:00 PM GMT)

அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள உள்ள ஏரியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை ரெயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அண்ணாமலை கூறினார்.

'மிக்ஜம்' புயலால் பாதிப்புக்கு உள்ளான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை கூறியதாவது:-

'மிக்ஜம்' புயலினால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் கடனில் இயங்குகிறது என்றும், இதிலிருந்து மீண்டு வருவதற்கு பொருளாதார ரீதியான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

எந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் வினியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளிவரும் தண்ணீரால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்து தர வலியுறுத்துவோம். மாநில அரசு இந்த அம்பத்தூர் பகுதியை மறந்துவிட்டது. தொழில்துறை அமைச்சர் ஏன் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை?. தொழிற்பேட்டையில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள உள்ள ஏரியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை ரெயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் சரிவர நடக்கவில்லை. ஆனால் 80 சதவீத அளவிற்கு நிவாரண மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாகவும் தலைமைச் செயலாளர் கூறுகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் தண்ணீர் தேக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, களத்திற்கு வராமல் இரண்டு அல்லது மூன்று இடத்தில் பார்வையிட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக கூறுவது தவறானது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர்களும், அதிகாரிகளும் களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat