மனைவியுடன் தகராறு: மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்...!
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகன் போலீசில் சரணடைந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் குப்பன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஸ்தூரியின் தாய் கல்யாணி (65) அதே பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மகன் குமார் வீட்டில் வசித்து வந்தார். குப்பனுக்கும், கஸ்தூரிக்கும் அடிக்கடி குடும்பச்சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தவிர மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட குப்பன் அவரிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அது போல ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாக கணவரிடம் கோபித்து கொண்டு கஸ்தூரி அதே பகுதியில் உள்ள தாய் கல்யாணி வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று தனது மாமியார் வீட்டுக்கு சென்ற குப்பன், அங்கு தனது மனைவி கஸ்தூரி வீட்டிற்கு வராதது குறித்தும், அடிக்கடி தன்னிடம் சண்டை போட்டு விட்டு செல்வது குறித்தும் மாமியார் கல்யாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த குப்பன், கஸ்தூரியை கத்தியால் குத்த முயன்றார். அதனை தடுக்க முயன்ற மாமியார் கல்யாணியின் முதுகு மற்றும் இடது கையில் குப்பன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கல்யாணி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து குப்பன், கத்தியுடன் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.