அரிக்கொம்பன் யானை குறித்த வழக்கு: வனவிலங்குகளை ஓரளவுக்குமேல் கண்காணிப்பது ஏற்புடையதல்ல- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரிக்கொம்பன் யானை குறித்த வழக்கில், வன விலங்குகளை ஓரளவுக்குமேல் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஏற்புடையதல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
அரிக்கொம்பன் யானை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பன் எனும் யானை, தனது 2 வயதில் தாயை இழந்தது. சின்னக்கானல் வனப்பகுதியில் ஏராளமான சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டதால், அதன் வழக்கமான பாதை மாறி அரிக்கொம்பன் யானை ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கடந்த ஏப்ரல் 26-ந் தேதி பெரியாறு புலிகள் காப்பக வனத்தில் விட்டுச்சென்றனர்.
அங்கிருந்து கம்பம் நகருக்குள் நுழைந்த அரிக்கொம்பனால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதன்பிறகு, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையிலிருந்து சின்ன ஓவுலாபுரம் - பெருமாள்மலை அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்த அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பன் வாகனத்தில் ஏற்றப்பட்டு, தற்போது நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்த யானையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வனத்துறை இடம் மாற்றுவதற்காக அதன் மீது அதிக வீரியமுள்ள மயக்க ஊசிகளை செலுத்துவதால் யானையின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதுடன் அதன் கோபமும், குணமும் மாறுகிறது. அத்துடன் லாரிகளில் ஏற்றி, இறக்கும் போது அதன் தும்பிக்கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
கண்காணிக்க தேவையில்லை
எனவே, அரிக்கொம்பன் யானையை அமைதிப்படுத்துவதற்காக அதிக வீரியமுள்ள மயக்க ஊசிகளை பயன்படுத்தக்கூடாது. அதன் இடப்பெயர்ச்சியை கண்காணிக்க சாட்டிலைட் ரேடியோ காலர் வசதி ஏற்படுத்த வேண்டும். அடர்ந்த காட்டிற்குள் செல்வதற்கான நிபுணத்துவம் பெற்ற கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். இந்த குழுவில் பழங்குடியினர் ஒருவரையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவியால் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை கண்காணிக்க முடியாது. எனவே, சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யானை கடந்த 5 மாதங்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமான நிலையிலும் வாழ்ந்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அத்துடன் யானையை நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்புடையதல்ல
விசாரணை முடிவில், யானைகளை எப்படி பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்பது வனத்துறையினருக்கு தெரியும். வன விலங்குகளை ஓரளவுக்கு மேல் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஏற்புடையதல்ல. அத்துடன் வழக்கு தொடர்ந்தவர் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.






