அரியலூர்: சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு


அரியலூர்: சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
x

அரியலூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை

சென்னை அண்ணா நகர் பொன்னி காலனி பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் கார்த்திக்கேயன்(வயது 41).இவர், சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர், தனது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, இவர், தனது மனைவி லட்சுமிபிரியா(35), மகள்கள் மித்ரா(11),ஹாசினி(7), தாய் மஞ்சுளா(56), ஆகியோருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

ராமேஸ்வரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு, இன்று மதியம் மீண்டும் சென்னைக்கு குடும்பத்துடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். காரை கார்த்திக்கேயன் ஓட்டி வந்துள்ளார். கார் மதியம் 3 மணியளவில் அரியலுார் மாவட்டம், சாத்தமங்கலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கார்த்திக்கேயன், லட்சுமிபிரியா, மஞ்சுளா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மித்ரா, ஹாசினி ஆகிய இருவரையும் கீழப்பழுவூர் போலீசார் மீட்டு, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹாசினி உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மித்ரா அரியலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரியலூர் கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசங்கர், அரியலூர் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் , மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story